செவ்வாய், 4 ஜனவரி, 2011

பழகு மொழி - 18

2) 3.3. வினை வகைகள்

பகுபத இலக்கணத்தைத் தொல்காப்பியம் விரித்துக் கூறாமல், "மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா" (உரியியல் 96) எனக் கூறி முடித்துக் கொண்டது. கடந்த பாடத்தில் நாம் படித்த 'செய்' வாய்பாடு, வினைப் பகுபதங்களுக்காக நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவரால் இயற்றப்பட்டதாகும். நன்னூலுக்கு உரை எழுதிய ஆறுமுக நாவலர், "இந் நூலாசிரியர் வடநூல் மேற்கோளாக ஒரு மொழியை விதந்து பகாப்பதம் பகுபதமெனக் காரணப் பெயர் தாமே இட்டு, எழுத்தே என்னும் சூத்திரம்முதல் இதுவரையும் பகாப்பதம் பகுபதம் எனப் பலதரம் சொல்லுதல் தன்குறி வழக்கம் மிக எடுத்துரைத்தல் என்னும் உத்தி" எனக் குறிப்பிடுகிறார். பதவியலின் பிற கூறுகளை நாம் உரிய இடங்களில் பிற்பாடு படிக்க இருக்கிறோம்.

இனி, பாடம் 15இன் பட்டியலில் உள்ள வினைவகைகளைப் பார்ப்போம்:

(2) 3.3.1 ஏவல் வினை

(2) 3.3.2 தெரிநிலை முற்றுவினை

வரிசை

ஏவல் வினை

தெரிநிலை முற்றுவினை

01)

நட

நடந்தான்

02)

வா

வந்தான்

03)

மடி

மடிந்தான்

04)

சீ

சீத்தான் (சீவினான்)

05)

விடு

விட்டான்

06)

கூ

கூவினான்

07)

வே

வெந்தான்

08)

வை

வைத்தான்

09)

நொ

நொந்தான்

10)

போ

போனான்

11)

வௌ

வௌவினான் (கவர்ந்தான்)

11)

உரிஞ்

உரிஞினான் (தேய்த்தான்)

13)

உண்

உண்டான்

14)

பொருந்

பொருநினான் (பொருந்தினான்)

15)

திரும்

திருமினான் (திரும்பினான்)

16)

தின்

தின்றான்

17)

தேய்

தேய்ந்தான்

18)

பாய்

பாய்ந்தான்

19)

செல்

சென்றான்

20)

வவ்

வவ்வினான் (பறித்தான்)

21)

வாழ்

வாழ்ந்தான்

22)

கேள்

கேட்டான்

23)

அஃகு

அஃகினான் (சுருங்கினான்)

மேற்காணும் பட்டியலில் ஏவல் வினை(பகுதி)யோடு ஆண்பால் ஒருமைக்கான 'ஆன்' விகுதி பெற்றத் தெரிநிலை முற்றுவினை ஆகிய இருவகை வினைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் 'வௌவ்வினான்', என்பதற்கு 'வவ்வினான்' என்பது போலியாக இருக்கலாம். ஏனெனில், இரண்டுக்கும் "கவர்ந்தான்/பறித்தான்" என்பதே பொருள்.

சான்றுகள்:

என்நெஞ்சும், நாணும், நலனும் இவையெல்லாம்
மன்னன் புனல்நாடன் வௌவினான் என்னே (முத்தொள்ளாயிரம் 37).

சதமகன் தனைச் சம்பரன் எனும்
மதமகன் துரந்து அரசு வவ்வினான் (கம்பராமாயணம் - கையடைப் படலம் 24-7).

குறிப்பு:

பழந்தமிழ் வழக்கின்படி 'நட' எனும் ஏவற் சொல்லை 'நடவாய்' என்றும் 'வா' என்பதை 'வாராய்' என்றும் எழுதுவர். இவ்விரு சொற்களிலும் விகுதியாய் அமைந்துள்ள 'ஆய்' என்பது புணர்ந்து கெட்டு, 'நட' என்றும் 'வா' என்றும் சுருங்கியது எனக் கூறுவர். 'நடந்தான்' எனும் முற்றுவினையைப் பிரித்தால், நட+த்+த்+ஆன் என நான்கு கூறுகளாகப் பிரியும். 'நடந்தனன்' எனும் முற்றுவினை, நட+த்+த்+அன்+அன் என ஐந்து கூறுகளாகப் பிரிக்கப்படும். முதலாவதில் 'ஆன்' விகுதியும் இரண்டாவதில் 'அன்' விகுதியும் வரும். இரண்டிலும் உள்ள 'த்' இடைநிலை, கடந்தகாலத்தைத் தெளிவாகத் தெரிவிக்கிறது. எனவே, 'தெரிநிலை' என்றானது. குறிப்பு முற்றுவினையில் காலம் உணர்த்தும் இடைநிலை இடம்பெறாது.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

புதன், 21 ஜூலை, 2010

பழகு மொழி - 17

பழகு மொழி
"ஒரு பகுபதத்தில் ஆகக் கூடுதலாக இடம்பெறத் தக்க உறுப்புகளின் எண்ணிக்கை ஆறாகும்" எனப் பாடம் 2.3இல் படித்தோம். அவை:

பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் எனப்படும். ஒரு பகுபதத்தின் தொடக்க உறுப்பாக, பகுக்கமுடியாத பகாப்பதப் 'பகுதி'யும் அதன் இறுதி உறுப்பாக 'விகுதி'யும் அமைந்திருக்கும். பகுதிக்கும் விகுதிக்கும் இடையில், இடமிருந்து வலமாக 'சாரியை', 'இடைநிலை', 'சந்தி' ஆகிய உறுப்புகள் இடம்பெறும். விகாரம் எனும் தனித்த ஓர் உறுப்பு இல்லையென்றாலும் சந்தியும் இடைநிலையும் புணரும்போது ஏற்படும் எழுத்தின்/ஒலியின் மாற்றம் விகாரம் எனப்படும். புணரியல் விதிப்படி பகுதிச் சொல்லானது, சிலபோது விகாரம் ஏற்று மாறுதல் அடையும்.

கடந்த பாடத்தில் படித்த ஏவல் வினைகளான
நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை,நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு ... (- நன்னூல் 147)

ஆகிய 23 பகாப் பதங்களான பகுதிகளோடு பிற உறுப்புகளை ஒட்டி, அவற்றைப் பகுபதங்களாக மாற்றலாம்.

(2) 3.2.1 வினைப் பகுபதம்

நட(பகுதி) +(ந் சந்தி) +த்(இடைநிலை) +அன்(சாரியை) +அர்(விகுதி) என ஐந்து உறுப்புகள் சேர்ந்து "நடத்தனர்" என்றாகி இருந்தது. ஆறாவதாக, இச்சொல்லின் சந்தியில் உள்ள தகர வல்லின ஒற்று (த்), புணரியல் விதிப்படி நகர மெல்லின ஒற்று (ந்)ஆக விகாரம் (மாற்றம்) பெற்று, "நடந்தனர்" என்றானது. இந்த வினைச் சொல்லின் தெரிநிலையான இறந்த/கடந்த காலத்தை உணர்த்துவது இடைநிலையாகும். "நடந்தனர்" எனும் சொல்லில் உள்ள பன்மை, பலர்பால், உயர்திணை, படர்க்கை ஆகிய அனைத்தையும் "அர்" எனும் விகுதிதான் உணர்த்தி நிற்கிறது.

மேற்காணும் ஆறு உறுப்புகளும் பகுபதங்களுக்கு உரியன என்பதை,

பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை,
சந்தி, விகாரம் ஆறினும் ஏற்பவை
முன்னிப் புணர்ப்ப முடியும் எப்பதங்களும்
என்று நன்னூல் (133) விளக்குகிறது.

"எப்பதங்களும்" எனும் நன்னூலின் குறிப்பு, எந்தப் பகுபதமானாலும் இந்த ஆறு உறுப்புகளுக்குள் அடக்கம் என்கிறது. அதாவது ஒரு பகுபதத்தின் உறுப்புகள் இரண்டிலிருந்து ஆறுவரை என்பது கணக்கு.

வா(பகுதி) +(ந் சந்தி) +த்(இடைநிலை) +ஆள்(விகுதி) = "வந்தாள்" எனும் வினைச் சொல்லில் நான்கு உறுப்புகளோடு புணரியல் விதிகளின்படி, இரு விகாரங்களும் உள்ளன. பகுதியான "வா" எனும் நெடில், "வ' எனக் குறுகியது முதல் விகாரம். சந்தியில் உள்ள 'த்', 'ந்'ஆக மாறியது இரண்டாவது விகாரம். ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய ஐம்பாலுக்கும் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களுக்கும் பொதுவானதாக இடைநிலை('த்') திகழ்வதோடல்லாமல் (இறந்த/கடந்த) காலத்தையும் காட்டி நிற்கிறது. ஓரெழுத்துக்குள் எத்தனை கூறுகள்? என்னே தமிழின் சிறப்பு! இதை,

தடறஒற்று இன்னே ஐம்பால் மூவிடத்து
இறந்த காலம் தரும்தொழில் இடைநில என்று நன்னூல் (142) எடுத்தியம்புகிறது. த்,ட்,ற் ஆகிய மூவெழுத்துகளுள் ஏதேனும் ஒன்று இடைநிலையாக வந்தால், அஃது இறந்த கால வினைச் சொல் என எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு புரிந்து கொள்வதற்குத்தான் 'பதவியல்' நமக்குக் கட்டாயப் பாடமாகிறது.

இறுதியில் அமைந்துள்ள "ஆள்" விகுதி, வந்தவள் படர்க்கை என்பதையும் படர்க்கையான 'அவள்' பெண்பால்+உயர்திணை+ஒருமை என்பதையும் ஒருசேர உணர்த்துகிறது.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், 27 மே, 2010

பழகு மொழி - 16

(2) 3.2 வினைப்பத வகைகள்

செயல்களை அடிப்படையாகக் கொண்ட சொற்களை வினைச் சொற்கள் என்போம். வினைச் சொற்களின் வகைகளை,



01 - ஏவல் வினை
02 - தெரிநிலை வினை
03 - குறிப்பு வினை
04 - தன் வினை
05 - பிற வினை
06 - செய் வினை
07 - செயப்பாட்டு வினை
08 - உடன்பாட்டு (இயல்மறை) வினை
09 - எதிர்மறை வினை
10 - (செயப்படு பொருள்) குன்றிய வினை
11 - (செயப்படு பொருள்) குன்றா வினை
12 - முற்று வினை (வினைமுற்று)
13 - எச்ச வினை (வினையெச்சம்)
14 - வியங்கோள் வினை
15 - துணை வினை

எனப் பிரிக்கலாம்.

(2) 3.2.1 வினைப் பகாப் பதம்

வினைச் சொல் வேற்றுமை ஏற்காது; தெளிவாகவோ குறிப்பாகவோ காலம் காட்டும்:

வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையும் காலை காலமொடு தோன்றும்.
காலம்தாமே மூன்று என மொழிப.
இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்
மெய்ந் நிலை உடைய தோன்றலாறே
- தொல்காப்பியம், வினையியல் 1-3.

எல்லா வகை வினைச் சொற்களும் மூன்று காலங்களான இறந்தகாலம், நிகழ்காலம் வருங்காலம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு காலத்தைத் தெளிவாகவோ குறிப்பாகவோ உணர்த்தும். அதனாற்றான், வினைச் சொற்களுக்குக் 'காலக்கிளவி' என்று இன்னொரு பெயரும் உண்டு.

காலத்தைத் தெளிவாகக் காட்டுபவை 'தெரிநிலை வினை' என்றும் குறிப்பாக உணர்த்துபவை 'குறிப்பு வினை' என்றும் இருவகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன.

ஒரு சொற்றொடரின் பிரிக்க முடியாத பகுதியாக வினைச் சொல் அமைந்திருந்தால் அது 'தெரிநிலை வினை' ஆகும்; பகுதியானது பெயர்ச் சொல்லாக இருப்பின் அது, 'குறிப்பு வினை' எனப்படும்.

காட்டுகள்:

'சென்றான்' எனும் சொல் கடந்த காலத்தைத் தெளிவாகக் காட்டும் தெரிநிலை வினை(முற்று). இதன் பகுதியான, 'செல்' என்பது ஏவற் சொல்லாகும் (செல்+ஆன்= சென்றான்).

'அவன் அழகன்' எனும் இரு சொற்களில் இறுதிச் சொல்லானது, 'அழகு' எனும் பண்புப் பெயரைப் பகுதியாகக் கொண்டுள்ளது. ஆனால் காலத்தை(த் தெளிவாக)க் காட்டவில்லை. எனினும்,

அவன் அழகன் ஆக இருந்தான்; அவன் அழகன் ஆக இருக்கிறான்; அவன் அழகன் ஆக இருப்பான் என்று காலங்களைக் குறிப்பாக உணர்த்துவதால் 'குறிப்பு வினை' என்றானது.

"வினைக் குறிப்புக் காலமொடு தோன்றுங்கால், பண்டுகரியன், இதுபொழுது கரியன், என இறந்த காலமும் நிகழ் காலமும் முறையானே பற்றி வருதலும் நாளைக்கரியனாம் என எதிர் காலத்து ஆக்கமொடு வருதலும் அறிக!" - தொல்காப்பிய வினையியல் உரையில் சேனாவரையர்.

ஆதலின், நாம் பாடம் (2) 3.1 (பெயர்ப் பகுபதங்கள்)இல் படித்த அறுவகைப் பெயர்ப் பகுபதங்களும் குறிப்பு வினையாக வரும்.

தலைப்பு (2) 3.1இல் குறிப்பிட்டுள்ள 15 வகை வினைகளுள் முதலாவதாக இடம்பெற்றுள்ள ஏவலில் முடியும் முற்றுவினைச் சொற்களைப் பற்றி, பாடம் (2) 2.1.2இல் படித்திருக்கிறோம். ஏவல் (முற்று)வினைச் சொற்கள், பகுக்க முடியாத பகாப் பதங்களாகவே அமைந்திருக்கும்:

நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை,
நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின்,
தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்று
எய்திய இருபான் மூன்றாம் ஈற்றவும்
செய் என் ஏவல் வினைப் பகாப்பதமே
-
நன்னூல் 147.

மேற்காணும் 23 சொற்களும் 'சொல்வதைச் செய்' என ஏவுவதாக இருப்பதால் இதனை, 'செய் வாய்பாடு' என அழைக்கின்றனர். 'செய்' வாய்பாட்டில் வரும் ஏவல்கள் அனைத்தும் வினைப் பகாப் பதங்களாகும்.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், 25 மார்ச், 2010

பழகு மொழி - 15

பெயர்ப் பகுபதங்கள்(2) 3.1 பெயர்ப் பகுபதங்கள்

பெயர்ப் பகுபதங்கள் என்பன (1)பொருள், (2)இடம், (3)காலம், (4)சினை/உறுப்பு, (5)குணம், (6)தொழில் ஆகிய ஆறு வகைகளை உள்ளடக்கியதாகும்:


(2) 3.1.(1) பொருட்பெயர்ப் பகுபதம்

ஒரு பொருளை அடிச்சொல்லாகக் கொண்டு அமைந்த பெயர்ப் பகுபதம், பொருட்பெயர்ப் பகுபதம் எனப்படும்.

காட்டுகள் :

முத்து, மணி, பொன், அமுது ஆகியன பொருள்களின் பெயர்களாகும். பகுதிகளான இவற்றோடு விகுதிகள் சேர்ந்து வரும்போது,

முத்து+அன் = முத்தன் என்றும்

மணி+அன் = மணியன் என்றும்

பொன்+அன் = பொன்னன் / பொன்+னி = பொன்னி என்றும்

அமுது+அன் = அமுதன் என்றும்

பொருட்பெயர்களாக மாற்றம் பெறுகின்றன. இவை பகுத்தக்கனவாக இருப்பதால் பொருட்பெயர்ப் பகுபதங்களாகும்.


(2) 3.1.(2) இடப்பெயர்ப் பகுபதம்

இடத்தைப் பகுதியாகக் கொண்டவை இடப்பெயர்ப் பகுபதம் ஆகும்.

காட்டுகள் :

கருவூர்+ஆர் = கருவூரார்;

உறையூர்+ஆன் = உறையூரான்;

நாஞ்சில்+அன்= நாஞ்சிலன்;

பட்டினம்+ஆர் = பட்டினத்தார்;

உலகு+ஓர் = உலகோர்


(2) 3.1.(3) காலப்பெயர்ப் பகுபதம்

நாள், திங்கள், ஆண்டு ஆகிய காலப்பெயர்களோடு விகுதி இணைந்திருப்பின் அவை காலப்பெயர்ப் பகுபதங்கள் ஆகும். காலப்பெயர்ப் பதங்கள் அரிதாகவே வழக்கிலிருக்கின்றன.

காட்டுகள் :

கார்த்திகை+அன் = கார்த்திகையன் (கார்த்திகேயன்);

ஆதிரை+ஆள் = ஆதிரையாள் (திருவாதிரையில் பிறந்தவள்).


(2) 3.1.(4) சினைப்பெயர்ப் பகுபதம்

உறுப்புகளின் பெயரோடு வருபவை சினை(உறுப்பு)ப்பெயர்ப் பகுபதங்களாகும். இவையும் அரிதானவையே.

காட்டுகள் :

கண்+அன் = கண்ணன்;

குழல்+இ = குழலி (குழல் என்பது இங்குக் கூந்தலைக் குறிக்கும்).


(2) 3.1.(5) குணப்பெயர்ப் பகுபதம்

ஒரு பண்பைப் பகுதியாகக் கொண்டு, அத்துடன் விகுதி இணைந்து வருவது குண(பண்பு)ப்பெயர்ப் பகுபதம் எனப்படும்.

காட்டுகள் :

முருகு+அன் = முருகன் / அழகு+அன் = அழகன்;

கருப்பு+அன் = கருப்பன்;

வெள்ளை+அன் = வெள்ளையன்


(2) 3.1.(6) தொழிற்பெயர்ப் பகுபதம்

தொழிற்பெயரோடு விகுதி சேர்ந்து வருபவை தொழிற்பெயர்ப் பகுபதங்கள் எனப்படும்.

காட்டுகள் :

கொத்து+அன் = கொத்தன்;

தச்சு+அன் = தச்சன்;

உழவு+அன் = உழவன்.


சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

பழகு மொழி - 14

(2) 3.பகுபதங்கள்

பகுக்கப் படும் பதங்கள் (சொற்கள்) பகுபதங்கள் எனப்படும். ஒரு பகுபதம் என்பது குறைந்தது இரு உறுப்புகளைக் கொண்டிருக்கும். முதலாவது உறுப்பு, "பகுதி" என்றும் இரண்டாவது உறுப்பு, "விகுதி" என்றும் கூறப்படும். சிலர், பகுதியை "அடிச்சொல்" என்றும் அதில் வந்து ஒட்டும் விகுதியை "ஒட்டு" எனவும் கூறுவர். ஒரு பகுபதத்தில் ஆகக் கூடுதலாக இடம்பெறத் தக்க உறுப்புகளின் எண்ணிக்கை ஆறாகும்.

பகுதியான அடிச்சொல் சுருக்கமான பொருளை உடையதாக விளங்கும். பகுதியும் விகுதியும் இணைந்து, விரிந்த பொருள் தரும். ஆனால், தனித்த விகுதி பொருளற்றுக் கிடக்கும்.

காட்டாக,

ஆடு+கள் = ஆடுகள். இதில் "ஆடு" எனும் சொல்லானது பொருள் தரும் தனித்த அடிச்சொல்(பகுதி) ஆக அமைந்துள்ளது. "கள்" எனும் விகுதி, பன்மையைச் சுட்டுவதற்காக வந்து ஒட்டியுள்ளது. இங்கு விகுதியாக வந்து ஒட்டிய "கள்", தனித்துப் பொருள் தரக்கூடிய குடிக்கும் "கள்" அன்று. எனவே, விகுதியான "கள்" பொருள் தரத்தக்கச் சொல்லன்று.

சுக்கு, அச்சு, கட்டு, பத்து, காப்பு, மாற்று ஆகியவை வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களாகும். இவற்றைப் பழகுமொழி-05இன் பாடம் (1):2:2இல் படித்திருக்கிறோம். வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து வரும் சொல் (வருமொழி) க/ச/த/ப ஆகிய ஏதேனும் ஒரு வல்லின உயிர்மெய்யில் தொடங்கினால், நிலைமொழியான குற்றியலுகரச் சொல்லின் இறுதியில் க்/ச்/த்/ப் ஆகிய வல்லொற்று இணைந்து கொள்ளும் என்பது விதி. இவ்விதி, வருமொழியானது தனித்துப் பொருள் தரும் சொல்லாக இருந்தால் மட்டுமே பொருந்தும்.

காட்டுகள்:
சுக்கு+குழம்பு = சுக்குக்குழம்பு; மாற்று+சாலை = மாற்றுச்சாலை; கட்டு+திட்டம் = கட்டுத்திட்டம்; பத்து+பாட்டு = பத்துப்பாட்டு

அதனாற்றான், எழுத்து, கருத்து, வாழ்த்து, பாட்டு ஆகியன வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களாகவே இருந்தபோதும் அவற்றுடன் வந்து ஒட்டும் தனித்துப் பொருள் தராத "கள்" விகுதியில் வலிமிகலாகாது என்று தமிழறிஞர்கள் கூறுவர்.

காட்டுகள்:

எழுத்து+கள் = எழுத்துகள்; கருத்து+கள் = கருத்துகள்; வாழ்த்து+கள் = வாழ்த்துகள்; பாட்டு+கள் = பாட்டுகள்.

ஒரு சொல் பகுக்கத் தக்க இரு உறுப்புகளைக் கொண்டிப்பதுபோல் தோன்றினாலும் இரு உறுப்புகளும் பொருள் தருவனவாக அமைந்திருந்தால் அச்சொல்லைப் பகுதி+விகுதி எனப் பிரித்துக் கூறலாகாது.

காட்டுகள்:

ஆடு+குட்டி = ஆட்டுக்குட்டி; தாய்+மடி = தாய்மடி; யானை+தந்தம் = யானைத்தந்தம்

மேற்காண்பவற்றுள் குட்டி, மடி, தந்தம் ஆகியன தனித்துப் பொருள் தரும் சொற்கள். எனவே, ஆட்டுக்குட்டி, தாய்மடி, யானைத்தந்தம் ஆகிய சொற்களை, "கூட்டுப்பகுதி" எனக் கூறுவர். அஃதாவது விகுதி அல்லாத, பகுதிகளின் கூட்டு என்பது அதன் பொருள்.

கூட்டுப்பகுதியை, "தொகைச்சொல்" என்றும் கூறுவர். தொகை என்றால் தொக்கி (மறைந்து) நிற்பதாகும். மேற்காணும் மூன்று காட்டுகளிலும் "இன்" எனும் ஐந்தாம் வேற்றுமை தொக்கி (மறைந்து) உள்ளது.

விளக்கம்:

ஆடு+இன்+குட்டி = ஆட்டின் குட்டி / ஆட்டுக்குட்டி; தாய்+இன்+மடி = தாயின் மடி / தாய்மடி; யானை+இன்+தந்தம் = யானையின் தந்தம் / யானைத்தந்தம்.


(2) 3.1 பகுபத வகைகள்

பகுபதங்கள் அறுவகைப் பெயர்களையும் காலங் காட்டும் இருவகை வினைகளையும் உள்ளடக்கியவை என்று நன்னூல் கூறுகிறது:

பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலின்
வருபெயர் பொழுதுகொள் வினைபகு பதமே
- நன்னூல் 132.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

புதன், 2 டிசம்பர், 2009

பழகு மொழி - 13

தலையாய 'பகுதி'யும் 'விகுதி' உடல் உறுப்புகளும்

(2) 2. இருவகைப் பதங்கள்

காரணம் ஏதுமின்றி, வாழையடி வாழையாகத் தமிழில் வழங்கிவரும் சொற்களை, "இடுகுறிச் சொற்கள்" என்பர். இடுகுறிச் சொற்களைப் பிரித்துப் பொருள் சொல்ல இயலாது. அவை முழுமையாக நின்றே பொருள் தருபவையாகும். இவ்வாறான இடுகுறிச் சொற்களைப் "பகாப் பதம்" எனக் கூறுவர். பகாப் பதங்கள் குறைந்த எழுத்துகளைப் பெற்றிருக்கும்.

குறைந்த எழுத்துகளைப் பெற்றிருந்தாலும் வயிறு, முக்காலி, நாற்காலி, காற்றாடி போன்ற காரணப் பெயர்கள் பகாப் பதங்களாகா.

(2) 2.1. பகாப் பதங்கள்

பெயர், வினை, இடை, உரி எனப் பகாப் பதங்கள் நான்கு வகைப்படும்:

பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி
முன்னே யொன்றாய் முடிந்தியல் கின்ற
பெயர்வினை இடைஉரி நான்கும் பகாப்பதம்
-நன்னூல் 131.

(2) 2.1.1. பெயர்ப் பகாப் பதம்

பெயர்ப் பகாப் பதங்கள் பெயர்ச் சொற்களாக வரும்.

காட்டுகள் : மண், மழை, நிலா, பலா.

(2) 2.1.2. வினைப் பகாப் பதம்

வினைப் பகாப் பதங்கள் பெரும்பாலும் ஏவல் வினைகளாக வரும்.

காட்டுகள் : எழு, நில், நட, செய்.

(2) 2.1.3. இடைப் பகாப் பதம்

பெயர்ச் சொல், வினைச் சொல் தவிர்த்து, இடைச் சொற்களாக வருபவை இடைப் பகாப் பதங்களாகும்.

காட்டுகள் : மற்று (மற்ற), ஆதல், போல், தான், உம், முன், பின், இனி, ஏ, ஓ போன்றவையும் வேற்றுமை உருபுகளான ஐ, ஆல், கு, ன், அது, கண் ஆகியனவும் இடைப் பகாப் பதங்களாகும்.

(2) 2.1.4. உரிப் பகாப் பதம்

பெரும்பாலும் 'மிக்க' எனும் ஒரு சொற்பொருளைப் பல சொற்களாகப் பயன்படுத்த உதவும் உரிச் சொற்கள், உரிப் பகாப் பதங்களாகும்.

காட்டுகள்: சால, உறு, தவ, நனி, கூர், கழி.

இவற்றுள் 'சால' எனும் உரி, சொல்லின் முன்னும் பின்னும் முறையே, பகுதி ("சாலச் சிறந்தது") ஆகவும் தொகை ("அன்புசால் நண்பர்களே!") ஆகவும் இடம் பெறும்.

இவை தவிர, சேர்ந்து வரும் சொற்களைப் பொருத்து, வேறுபட்ட பொருள்களைத் தரத்தக்க, 'கடி' எனும் ஓர் உரிச் சொல்லும் உண்டு: கடிமணம் = புதுமையான திருமணம்; கடிவேல் = கூர்மையான வேல்; கடிமுரசு = ஆர்க்கும் முரசு; கடிவந்தான் = விரைந்து வந்தான். 'கடி' உரி, பகுதியாக வரும்.

மேற்காணும் காட்டுகளில் குறிப்பிட்டுள்ள பெயர், வினை, இடை, உரிச் சொற்களைப் பிரிக்க முடியாது; பிரித்தால் அவை பொருள் தரா.

பகுக்கத் தக்க ஒரு பெயர்/வினைச் சொல் எத்துணை நீளமானதாக இருந்தாலும் அதன் பகாப் பதமே அச்சொல்லின் தலையாய பகுதி ஆகும். தத்தம் பகாப் பதங்களே பகுதி யாகும் - நன்னூல் 134.

காட்டு : வா+த்+த்+அன்+அன் = "வந்தனன்" எனும் வினைச் சொல்லின் தலையாய் உள்ள "வா" எனும் வினையடிதான் இச்சொல்லின் பகுதியாகும். (எடுத்துக் காட்டில் எழுத்துப்பிழை ஏதுமில்லை). வெகு அரிதாக இடை/உரிச் சொற்கள் பகுதியாக அமைவதுண்டு. அவை பற்றி அடுத்து வரும் பாடங்களில் படிக்கலாம்.


சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ... தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, 8 நவம்பர், 2009

பழகு மொழி - 12

பழகுவோம்(2) சொல்லியல்
சொல் எனப் படுவது யாதெனில், ஓரெழுத்தாக இருந்தாலும் பல எழுத்துகளாகச் சேர்ந்தாலும் தமிழில் பொருள் தருமானால் அது "சொல்" என வழங்கப் படும். சொல்லை வடமொழியில் "பதம்" எனக் குறிக்கின்றனர். பதம் எனும் வடசொல், தமிழ் இலக்கண நூல்களில் வெகுஇயல்பாக ஆளப் பட்டுள்ளது.

எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருள்தரிற் பதமாம் அதுபகாப் பதம்பகு பதமென இருபா லாகி யியலு மென்ப - நன்னூல் 128.

(2) 1 ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள்:

தமிழில் ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள் நாற்பதுக்கும் அதிகமுண்டு எனக் கூறுவர். அவற்றுள் பல வழக்கொழிந்து போயின. நாம் தெரிந்து கொள்ளத் தக்க ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள் சிலவற்றை இங்குக் காண்போம். "ஓரெழுத்து ஒருமொழி அனைத்தும் நெடிலாக அமையும்; குறிலோசை எழுத்துகள் ஓரெழுத்து ஒருமொழியாக வாரா" என்பது தொல்காப்பியரின் துணிபு : நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி; குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே - தொல்காப்பியம் - மொழிமரபு 10,11.

ஆனால், நாம் பாடம் (1):1:1:3இல் படித்த அகச்சுட்டு எழுத்துகளான அ,இ,உ ஆகிய மூன்றும் வினா எழுத்தான 'எ'வும் குறில்களே. தனிச் சொல் எனும் தகுதி பெறாமல் இடைச் சொல் வகையைச் சேர்ந்திருப்பதால் அவை ஒதுக்கப் பட்டன போலும். எனினும், தனிச் சொல்லாகவே அமையும் இரு குறில் எழுத்துகளும் உள:

(2) 1:1 ஓரெழுத்து ஒருமொழிச் சொல் - குறில்:

து = சாப்பிடு எனும் பொருள் தரும் ஏவல் வினை
நொ = வருந்து (ஏவல்)
+சொல் = அச்சொல்(சுட்டு)
+பாடம் = இப்பாடம்(சுட்டு)
+பக்கம் = உப்பக்கம்(பின் பக்கம் - சுட்டு)
+நூல் = எந்நூல்? (வினா)

மேற்காணும் ஓரெழுத்து அகச்சுட்டு/வினா ஒருமொழியின் புறச்சுட்டுச் சொற்கள்: அந்த, இந்த, உந்த, எந்த ஆகியனவாகும்.

(2) 1:2 ஓரெழுத்து ஒருமொழிச் சொல் - நெடில்:

= பசு
= பறக்கும் பூச்சி; =வழங்கு (ஏவல் வினை)
= ஊன்/இறைச்சி
= அம்பு (கருவி)
= ஐந்து (எண்: ஐ+பால்=ஐம்பால்)
= மதகில்/அணையில் நீரைத் தடுத்து வைக்கப் போடும் பலகை
கா = காத்தல் (வினை); கா=தோட்டம்/சோலை: பூ+கா = பூங்கா (பெயர்)
கை = கரம் (சினை/உறுப்பு)
கோ = மன்னன்
கௌ = கவ்வு (ஏவல்)
சா = சாவு
சீ = அழி/விலகு/நீங்கு (ஏவல்)
சே = செம்மை (பண்பு)
தா = கொடு (ஏவல்)
தீ = நெருப்பு
தை = தை(காலம்); தை = தையல் செய் (ஏவல்)
நா = நாக்கு
நீ = நீ (முன்னிலைச் சுட்டு)
பா = பாடல்
பூ = மலர்; பூ = பூமி/உலகு
போ = செல் (ஏவல்)
பை = கைப்பை/பணப்பை
மா = மாம்பழம்; மா = பெரிய (பண்பு)
மீ = மேல்
மை = மசி
வா = அழைப்பு (ஏவல்)
வை = வை (ஏவல்)
வௌ = திருடு (ஏவல்)

மீக்கூறிய 28 ஓரெழுத்து ஒருமொழிச் சொற்களுள் கை, சீ, தா, தீ, தை, நீ, பூ, போ, பை, மை, வா, வை ஆகியன நாம் உரைநடைப் பேச்சிலும் எழுத்திலும் இயல்பாகப் பயன்படுத்துபவை. மற்றவை பா எழுதுவதற்குப் பயன் படுவனவாகும்.

இனி, இன்னொன்றும் வழக்கில் வரக்கூடும்: "ஆடி மாதம் ஆற்றில் வெள்ளம் வந்தால் ''ப் போடு!"

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

செவ்வாய், 13 அக்டோபர், 2009

பழகு மொழி - 11

இலக்கணப் போலி என்றும் எழுத்துப் போலி என்றும் போலிகள் இருவகைப்படும்.

இப்போது எழுத்தியலை நாம் பயின்று கொண்டிருப்பதால் எழுத்துப் போலிகளை அறிந்து கொள்வோம்.

ஒரு சொல்லில் உள்ள ஓர் எழுத்தை மாற்றி எழுதினாலும் பொருள் வேறுபடாமல் அமைந்தால் அவ்வெழுத்து, போலி எனப்படும். போல வருவது போலி என்றானது.

இயல்பான சில எழுத்துகளுக்குப் பகரமாகப் போலி எழுத்துகள் இடம் பெறுவது வழக்கில் உள்ளது என்பதையும் அவ்வாறு எழுதுதல் குற்றமில்லை என்பதையும் தெரிந்து கொள்வதற்குப் போலிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

(1):11 எழுத்துப் போலிகள்

எழுத்துப் போலிகள் மூவகைப் படும்.

(1):11:1 முதற்போலி

ஒரு சொல்லின் இயல்பான முதலெழுத்துக்குப் பகரமாய், வேறு எழுத்துகள் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது முதற்போலி எனப்படும்.

(1):11:1:1 'ஐ'காராத்துக்குப் பகரமாய், 'அய்' எனும் இரு எழுத்துகள் போலிகளாக எழுதப் படும். காட்டுகள் :யா=அய்யா; ஐயன்மீர்=அய்யன்மீர்

(1):11:1:2 ''காரத்துக்குப் பகரமாய், 'அவ்' எனும் இரு எழுத்துகள் போலிகளாக எழுதப் படும். காட்டுகள் : வையார் = அவ்வையார்; டதம் = அவ்டதம்

(1):11:1:3 'ந'கரத்துக்கு 'ஞ'கரம் போலியாக எழுதப் படும். காட்டுகள் : யம்பட = யம்பட; நாயிறு=ஞாயிறு

(1):11:2 இடைப்போலி

ஒரு சொல்லுக்கு இடையில் இயல்பான எழுத்தை விடுத்து வேறு எழுத்தைப் போட்டு எழுதுவது இடைப்போலி எனப்படும்.

'அ'கரத்துக்கு 'ஐ'காரம் போலியாக எழுதப் படும்.

காட்டுகள் :யன் = அரையன்; பமை = பழைமை; இமை = இளைமை

(1):11:3 கடைப்போலி

ஒரு சொல்லின் கடைசியில் உள்ள இயல்பான எழுத்துக்குப் பகரமாய் வேறோர் எழுத்து இடம் பெறுவது கடைப்போலி எனப்படும்.

(1):11:3:1 மகர ஒற்றுக்கு னகர ஒற்று, போலியாக வரும்.

காட்டுகள் : அறம்=அறன்; திறம்=திறன் (அறன் அறிந்து வெஃகா அறிவுடையோர்ச் சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு - குறள்) நயம்=நயன் (நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன் இல சொல்லாமை நன்று - குறள்) குலம்=குலன் (இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன் உடையான் கண்ணே உள - குறள்) நலம் = நலன்; கலம்=கலன்; நிலம்=நிலன்

(1):11:3:2 லகர ஒற்றுக்கு ரகர ஒற்று, போலியாக வரும்.

காட்டுகள் : குடல்=குடர்; சுவல்=சுவர்; பந்தல்=பந்தர்; சாம்பல்=சாம்பர்

(1):11:3:3 லகர ஒற்றுக்கு ளகர ஒற்றும் போலியாக வரும்.

காட்டுகள் : மதில்=மதிள்; செதில்=செதிள்.

எழுத்தியல் இத்துடன் நிறைவடைகிறது.

சொல்லியலைத் தொடங்குவோம், இன்ஷா அல்லாஹ்.

திங்கள், 28 செப்டம்பர், 2009

பழகு மொழி - 10


தமிழ் + சொல் = தமிழ் சொல் என்று எழுதுவது சரியா?

தமிழ் + ச் + சொல் = தமிழ்ச் சொல் என 'ச்' எனும் மெய்யைச் சேர்த்து எழுதுவது சரியா? போன்ற (மெய்)மயக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அடுத்து வரவிருக்கும் சொல்லியல் பாடத்தில் 'வலிமிகுதல்', 'வலிமிகா இடங்கள்' ஆகிய இரண்டு பகுதிகளில் அவற்றை விரிவாகப் படிக்க இருக்கிறோம். இன்றைய பாடம் எழுத்து வகை மெய் மயக்கமாகும்.


(1):10 மெய் மயக்கம்

"அக்கம், அன்பு ஆகிய இரு சொற்களில் எத்தன மெய்கள் உள்ளன?" என ஒரு வினாவை எழுப்பினால், "முதல் சொல்லான அக்கம் இரு மெய்களையும் இரண்டாவது சொல்லான அன்பு, ஒரு மெய்யையும் கொண்டிருக்கின்றன" என்றே விடை சொல்வோம். ஆனால், இந்தப் பாடத்தைப் பொருத்த மட்டில் அந்த விடை தவறானதாம்.


(1):10:1 உடனிலை மெய் மயக்கம்

அக்கம் எனும் சொல், அ+க்+க்+அ+ம் எனப் பிரியும். எனவே, ('அ' எனும்) ஓர் உயிர், ('க்' எனும்) ஒரு தனிமெய், (க்+அ='க' எனும்) ஓர் உயிர் மெய், ('ம்' எனும்) ஒரு தனிமெய் ஆகியன அக்கம் எனும் சொல்லில் அடங்கி இருக்கின்றன.

ஒரு சொல்லுக்குள் ஒரு (க்) தனிமெய்யும் அதையடுத்து (க் எனும்) அதே மெய், (அ எனும்) உயிர் கலந்து (க்+அ=க என்று) இரட்டித்து வருவதை, "உடனிலை மெய் மயக்கம்" எனக் கூறுவர்.

கீழ்க்காணும் காட்டுகள் பாடம் (1):8இல் கொடுக்கப் பட்டன:

பாக்கம் (பா+க்+க்+அ+ம்), அச்சம் (அ+ச்+ச்+அ+ம்), வாட்டம் (வா+ட்+ட்+அ+ம்), இங்ஙனம் (இ+ங்+ங்+அ+ன்+அ+ம்), அஞ்ஞானம் (அ+ஞ்+ஞ்+ஆ+ன்+அ+ம்), கண்ணன் (க+ண்+ண்+அ+ன்), பொய்யாமொழி (பொ+ய்+ய்+ஆ+ம்+ஒ+ழ்+இ).


(1):10:2 வேற்றுநிலை மெய் மயக்கம்

'அன்பு' (அ+ன்+ப்+உ) எனும் சொல்லில் ('அ' எனும்) ஓர் உயிரும் ('ன்' எனும்) ஒரு தனிமெய்யும் ('பு' எனும்) ஓர் உயிர் மெய்யும் உள்ளன. இவ்வாறு ஒரு தனிமெய்யை அடுத்து அதே மெய்யல்லாத வேறொரு மெய்(ப்), உயிர்(உ) கலந்து(பு) வருவதை. "வேற்றுநிலை மெய் மயக்கம்" எனக் கூறுவர்.

(1):10:3 இரு தனிமெய் எழுத்துகள்

உரைநடையில், தன்னை அடுத்து இன்னொரு தனிமெய்யை ஏற்றுக் கொள்ளும் தனிமெய்கள் ய்,ர்,ழ் ஆகிய மூன்றாகும். "ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற" - தொல்காப்பியம், எழுத்தியல் 15. (செய்யுள்களில் ஒற்றளபெடை எனும் விதிவிலக்கு உண்டு).

காட்டுகள்:

ய் : வாய்க்கால், பாய்ச்சல், காய்த்தல், வாய்ப்பு

ர் : பார்க்க, உணர்ச்சி, பெயர்த்து, ஈர்ப்பு

ழ் : வாழ்க்கை, மகிழ்ச்சி, வாழ்த்து, காழ்ப்பு


(1):10:4 ஏற்பன, மறுப்பன, சேர்ப்பன

ஒரு சொல்லுக்குள் 'ச'கர மெய்(யான ச்)ஐ அடுத்து 'ச'கர வரிசை (உயிர்) மெய் மட்டுமே இடம் பெறும். தன்னை ஒட்டி வேறு எந்த (உயிர்) மெய்யையும் சகர மெய் ஏற்காது.

காட்டுகள்:
ச்சை, கச்சு, இச்சை, தச்சு, குச்சி.

க,த,ப ஆகிய வல்லின மெய்களுள் எதுவும் தன்னை ஒட்டி, தன் இன (உயிர்) மெய்யைத் தவிர பிற இரண்டின் (உயிர்) மெய்களை ஏற்பதில்லை. அவ்வாறு ஏற்பவை தமிழ்ச் சொற்களாகா என்பதறிக.

காட்டுகள்:
க்தி, சப்தம், சமத்காரம் ஆகியன வடமொழிச் சொற்களாகும்.

வல்லின மெய்களை ஒட்டி வல்லினமே அல்லாது மெல்லின, இடையின (உயிர்) மெய் எழுத்துகள் இடம் பெற்றிருந்தால் அவை வடமொழிச் சொற்களாகவே இருக்கும்.

காட்டுகள்:
நாகரத்னம் (மெல்லினம்), சாத்வீகம் (இடையினம்), வியாக்யானம் (இடையினம்) ஆகியன வடமொழிச் சொற்களாகும்.

இதனாற்றான், மேற்காணும் வடமொழிச் சொற்களோடு தமிழ்ச் சொல் இலக்கணத்துக்கு ஏற்ப முறையே நாகரத்தினம், சாத்துவீகம், வியாக்கியானம் என அச்சொல்லுக்குள் உள்ள மெய்யெழுத்து, இரட்டித்து உயிர் கலந்து எழுதப் படுகிறது.

வடசொற் கிளவிவடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே - தொல்காப்பியம், எச்சவியல் 5.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில்

தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

பழகு மொழி - 09


(1):6 சொல்லின் முதலில் இடம்பெறா எழுத்துகள்:

(1):6:1 புள்ளியுடைய மெய்யெழுத்து எதுவும் சொல்லின் முதலாவதாக வராது.

(1):6:2 டகர, றகர, ஙகர, ணகர, னகர, லகர, ளகர, ழகர, வரிசைகளில் எந்த எழுத்தும் தமிழ்ச் சொல்லுக்கு முதலில் வாரா.

(1):6:3 யகர வரிசையில் யி, யீ, யெ, யே, யை, யொ ஆகிய ஆறு எழுத்துகளும் தமிழ்ச் சொல்லின் முதலில் வாரா.

(1):6:4 வகர வரிசையில் வு, வூ, வொ, வோ ஆகிய நான்கு எழுத்துகளும் தமிழ்ச் சொல்லின் முதலில் வாரா.

(1):7 சொல்லுக்குள் இடையில் வராத எழுத்துகள்:

(1):7:1 ஒரு சொல்லின் இடையில் அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12 தனித்த உயிரெழுத்துகளும் உரைநடையில் இடம்பெறா. (செய்யுளில் விதிவிலக்கு உண்டு).

(1):7:2 ட், ற் என்னும் இரு எழுத்துகளை அடுத்து எந்த மெய்யும் இடம் பெறாது.

காட்ச்சி, மாட்ச்சி, அதற்க்கு, இதற்க்கு என எழுதுவது பிழையாகும்.

(1):8 சொல்லுக்குள் மெய் இரட்டித்து வராத எழுத்துகள்:

பாடம் (1):2:2இல் கூறப்பட்டிருக்கும் (க்+க்+உ=)க்கு, (ச்+ச்+உ=)ச்சு, (ட்+ட்+உ=)ட்டு ஆகியன ஒரு சொல்லின் இறுதியில் அமையாமல், இடையில் அமைந்திருந்தால் அவற்றை, "உடனிலை மெய் மயக்கம்" எனக் கூறுவர்.

காட்டுகள்:

பாக்கம் (பா+க்+க்+அ+ம்), அச்சம் (அ+ச்+ச்+அ+ம்), வாட்டம் (வா+ட்+ட்+அ+ம்), இங்ஙனம் (இ+ங்+ங்+அ+ன்+அ+ம்), அஞ்ஞானம் (அ+ஞ்+ஞ்+ஆ+ன்+அ+ம்), கண்ணன் (க+ண்+ண்+அ+ன்), பொய்யாமொழி (பொ+ய்+ய்+ஆ+ம்+ஒ+ழ்+இ).

இவ்வாறு மெய் இரட்டித்து வருதல், உடனிலை மெய் மயக்கம் ஆகும்.

ர், ழ் ஆகிய இரு எழுத்துகள் உரைநடையில் மெய் இரட்டித்து வாரா. (செய்யுளில் விதிவிலக்கு உண்டு). "மெய்ம்மயக்கு உடனிலை ர ழ ஒழித்து ஈர் எட்டு ஆகும் ..." - நன்னூல் 110.


(1):9 சொல்லின் இறுதியில் வராத எழுத்துகள்:

(1):9:1 ஆ, ஈ போன்ற ஓரெழுத்து ஒரு மொழியானது, ஒரு கடைசிச் சொல்லாக (கன்றுக்குப் பால் தரும் [பசு]; பறந்து போனது ) அன்றி, ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளைக் கொண்ட ஒரு சொல்லின் இறுதியில் அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12 தனித்த உயிரெழுத்துகளும் உரைநடையில் இடம்பெறா. (செய்யுளில் விதிவிலக்கு உண்டு).

(1):9:2 க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறு வல்லின மெய்யெழுத்துகளும் சொல்லுக்கு இறுதியில் வாரா.

கால்+சிலம்பு என்பதை காற் சிலம்பு என்று பிரித்து எழுதாமல் காற்சிலம்பு எனச் சேர்த்து எழுத வேண்டும்.

(1):9:3 ங், ஞ், ந் ஆகிய மூன்று மெல்லின எழுத்துகள் சொல்லின் இறுதியில் வாரா (பண்டைய இலக்கியத்தில் அரிதாக இடம் பெற்ற ஞ், ந் ஆகிய இரு எழுத்துகளும் இப்போது வழக்கொழிந்து விட்டன).

மூன்று+நூறு என்பதை முந் நூறு என்று பிரித்து எழுதாமல் முந்நூறு எனச் சேர்த்து எழுத வேண்டும்.

(1)9:4 இடையினத்தில் வ் மட்டும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.

அந்த+வாசல் என்பதை அவ் வாசல் என்று பிரித்து எழுதாமல் அவ்வாசல் எனச் சேர்த்து எழுத வேண்டும்.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

-தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.