புதன், 21 ஜூலை, 2010

பழகு மொழி - 17

பழகு மொழி
"ஒரு பகுபதத்தில் ஆகக் கூடுதலாக இடம்பெறத் தக்க உறுப்புகளின் எண்ணிக்கை ஆறாகும்" எனப் பாடம் 2.3இல் படித்தோம். அவை:

பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் எனப்படும். ஒரு பகுபதத்தின் தொடக்க உறுப்பாக, பகுக்கமுடியாத பகாப்பதப் 'பகுதி'யும் அதன் இறுதி உறுப்பாக 'விகுதி'யும் அமைந்திருக்கும். பகுதிக்கும் விகுதிக்கும் இடையில், இடமிருந்து வலமாக 'சாரியை', 'இடைநிலை', 'சந்தி' ஆகிய உறுப்புகள் இடம்பெறும். விகாரம் எனும் தனித்த ஓர் உறுப்பு இல்லையென்றாலும் சந்தியும் இடைநிலையும் புணரும்போது ஏற்படும் எழுத்தின்/ஒலியின் மாற்றம் விகாரம் எனப்படும். புணரியல் விதிப்படி பகுதிச் சொல்லானது, சிலபோது விகாரம் ஏற்று மாறுதல் அடையும்.

கடந்த பாடத்தில் படித்த ஏவல் வினைகளான
நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை,நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு ... (- நன்னூல் 147)

ஆகிய 23 பகாப் பதங்களான பகுதிகளோடு பிற உறுப்புகளை ஒட்டி, அவற்றைப் பகுபதங்களாக மாற்றலாம்.

(2) 3.2.1 வினைப் பகுபதம்

நட(பகுதி) +(ந் சந்தி) +த்(இடைநிலை) +அன்(சாரியை) +அர்(விகுதி) என ஐந்து உறுப்புகள் சேர்ந்து "நடத்தனர்" என்றாகி இருந்தது. ஆறாவதாக, இச்சொல்லின் சந்தியில் உள்ள தகர வல்லின ஒற்று (த்), புணரியல் விதிப்படி நகர மெல்லின ஒற்று (ந்)ஆக விகாரம் (மாற்றம்) பெற்று, "நடந்தனர்" என்றானது. இந்த வினைச் சொல்லின் தெரிநிலையான இறந்த/கடந்த காலத்தை உணர்த்துவது இடைநிலையாகும். "நடந்தனர்" எனும் சொல்லில் உள்ள பன்மை, பலர்பால், உயர்திணை, படர்க்கை ஆகிய அனைத்தையும் "அர்" எனும் விகுதிதான் உணர்த்தி நிற்கிறது.

மேற்காணும் ஆறு உறுப்புகளும் பகுபதங்களுக்கு உரியன என்பதை,

பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை,
சந்தி, விகாரம் ஆறினும் ஏற்பவை
முன்னிப் புணர்ப்ப முடியும் எப்பதங்களும்
என்று நன்னூல் (133) விளக்குகிறது.

"எப்பதங்களும்" எனும் நன்னூலின் குறிப்பு, எந்தப் பகுபதமானாலும் இந்த ஆறு உறுப்புகளுக்குள் அடக்கம் என்கிறது. அதாவது ஒரு பகுபதத்தின் உறுப்புகள் இரண்டிலிருந்து ஆறுவரை என்பது கணக்கு.

வா(பகுதி) +(ந் சந்தி) +த்(இடைநிலை) +ஆள்(விகுதி) = "வந்தாள்" எனும் வினைச் சொல்லில் நான்கு உறுப்புகளோடு புணரியல் விதிகளின்படி, இரு விகாரங்களும் உள்ளன. பகுதியான "வா" எனும் நெடில், "வ' எனக் குறுகியது முதல் விகாரம். சந்தியில் உள்ள 'த்', 'ந்'ஆக மாறியது இரண்டாவது விகாரம். ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய ஐம்பாலுக்கும் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களுக்கும் பொதுவானதாக இடைநிலை('த்') திகழ்வதோடல்லாமல் (இறந்த/கடந்த) காலத்தையும் காட்டி நிற்கிறது. ஓரெழுத்துக்குள் எத்தனை கூறுகள்? என்னே தமிழின் சிறப்பு! இதை,

தடறஒற்று இன்னே ஐம்பால் மூவிடத்து
இறந்த காலம் தரும்தொழில் இடைநில என்று நன்னூல் (142) எடுத்தியம்புகிறது. த்,ட்,ற் ஆகிய மூவெழுத்துகளுள் ஏதேனும் ஒன்று இடைநிலையாக வந்தால், அஃது இறந்த கால வினைச் சொல் என எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு புரிந்து கொள்வதற்குத்தான் 'பதவியல்' நமக்குக் கட்டாயப் பாடமாகிறது.

இறுதியில் அமைந்துள்ள "ஆள்" விகுதி, வந்தவள் படர்க்கை என்பதையும் படர்க்கையான 'அவள்' பெண்பால்+உயர்திணை+ஒருமை என்பதையும் ஒருசேர உணர்த்துகிறது.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், 27 மே, 2010

பழகு மொழி - 16

(2) 3.2 வினைப்பத வகைகள்

செயல்களை அடிப்படையாகக் கொண்ட சொற்களை வினைச் சொற்கள் என்போம். வினைச் சொற்களின் வகைகளை,01 - ஏவல் வினை
02 - தெரிநிலை வினை
03 - குறிப்பு வினை
04 - தன் வினை
05 - பிற வினை
06 - செய் வினை
07 - செயப்பாட்டு வினை
08 - உடன்பாட்டு (இயல்மறை) வினை
09 - எதிர்மறை வினை
10 - (செயப்படு பொருள்) குன்றிய வினை
11 - (செயப்படு பொருள்) குன்றா வினை
12 - முற்று வினை (வினைமுற்று)
13 - எச்ச வினை (வினையெச்சம்)
14 - வியங்கோள் வினை
15 - துணை வினை

எனப் பிரிக்கலாம்.

(2) 3.2.1 வினைப் பகாப் பதம்

வினைச் சொல் வேற்றுமை ஏற்காது; தெளிவாகவோ குறிப்பாகவோ காலம் காட்டும்:

வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையும் காலை காலமொடு தோன்றும்.
காலம்தாமே மூன்று என மொழிப.
இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்
மெய்ந் நிலை உடைய தோன்றலாறே
- தொல்காப்பியம், வினையியல் 1-3.

எல்லா வகை வினைச் சொற்களும் மூன்று காலங்களான இறந்தகாலம், நிகழ்காலம் வருங்காலம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு காலத்தைத் தெளிவாகவோ குறிப்பாகவோ உணர்த்தும். அதனாற்றான், வினைச் சொற்களுக்குக் 'காலக்கிளவி' என்று இன்னொரு பெயரும் உண்டு.

காலத்தைத் தெளிவாகக் காட்டுபவை 'தெரிநிலை வினை' என்றும் குறிப்பாக உணர்த்துபவை 'குறிப்பு வினை' என்றும் இருவகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன.

ஒரு சொற்றொடரின் பிரிக்க முடியாத பகுதியாக வினைச் சொல் அமைந்திருந்தால் அது 'தெரிநிலை வினை' ஆகும்; பகுதியானது பெயர்ச் சொல்லாக இருப்பின் அது, 'குறிப்பு வினை' எனப்படும்.

காட்டுகள்:

'சென்றான்' எனும் சொல் கடந்த காலத்தைத் தெளிவாகக் காட்டும் தெரிநிலை வினை(முற்று). இதன் பகுதியான, 'செல்' என்பது ஏவற் சொல்லாகும் (செல்+ஆன்= சென்றான்).

'அவன் அழகன்' எனும் இரு சொற்களில் இறுதிச் சொல்லானது, 'அழகு' எனும் பண்புப் பெயரைப் பகுதியாகக் கொண்டுள்ளது. ஆனால் காலத்தை(த் தெளிவாக)க் காட்டவில்லை. எனினும்,

அவன் அழகன் ஆக இருந்தான்; அவன் அழகன் ஆக இருக்கிறான்; அவன் அழகன் ஆக இருப்பான் என்று காலங்களைக் குறிப்பாக உணர்த்துவதால் 'குறிப்பு வினை' என்றானது.

"வினைக் குறிப்புக் காலமொடு தோன்றுங்கால், பண்டுகரியன், இதுபொழுது கரியன், என இறந்த காலமும் நிகழ் காலமும் முறையானே பற்றி வருதலும் நாளைக்கரியனாம் என எதிர் காலத்து ஆக்கமொடு வருதலும் அறிக!" - தொல்காப்பிய வினையியல் உரையில் சேனாவரையர்.

ஆதலின், நாம் பாடம் (2) 3.1 (பெயர்ப் பகுபதங்கள்)இல் படித்த அறுவகைப் பெயர்ப் பகுபதங்களும் குறிப்பு வினையாக வரும்.

தலைப்பு (2) 3.1இல் குறிப்பிட்டுள்ள 15 வகை வினைகளுள் முதலாவதாக இடம்பெற்றுள்ள ஏவலில் முடியும் முற்றுவினைச் சொற்களைப் பற்றி, பாடம் (2) 2.1.2இல் படித்திருக்கிறோம். ஏவல் (முற்று)வினைச் சொற்கள், பகுக்க முடியாத பகாப் பதங்களாகவே அமைந்திருக்கும்:

நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை,
நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின்,
தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்று
எய்திய இருபான் மூன்றாம் ஈற்றவும்
செய் என் ஏவல் வினைப் பகாப்பதமே
-
நன்னூல் 147.

மேற்காணும் 23 சொற்களும் 'சொல்வதைச் செய்' என ஏவுவதாக இருப்பதால் இதனை, 'செய் வாய்பாடு' என அழைக்கின்றனர். 'செய்' வாய்பாட்டில் வரும் ஏவல்கள் அனைத்தும் வினைப் பகாப் பதங்களாகும்.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

வியாழன், 25 மார்ச், 2010

பழகு மொழி - 15

பெயர்ப் பகுபதங்கள்(2) 3.1 பெயர்ப் பகுபதங்கள்

பெயர்ப் பகுபதங்கள் என்பன (1)பொருள், (2)இடம், (3)காலம், (4)சினை/உறுப்பு, (5)குணம், (6)தொழில் ஆகிய ஆறு வகைகளை உள்ளடக்கியதாகும்:


(2) 3.1.(1) பொருட்பெயர்ப் பகுபதம்

ஒரு பொருளை அடிச்சொல்லாகக் கொண்டு அமைந்த பெயர்ப் பகுபதம், பொருட்பெயர்ப் பகுபதம் எனப்படும்.

காட்டுகள் :

முத்து, மணி, பொன், அமுது ஆகியன பொருள்களின் பெயர்களாகும். பகுதிகளான இவற்றோடு விகுதிகள் சேர்ந்து வரும்போது,

முத்து+அன் = முத்தன் என்றும்

மணி+அன் = மணியன் என்றும்

பொன்+அன் = பொன்னன் / பொன்+னி = பொன்னி என்றும்

அமுது+அன் = அமுதன் என்றும்

பொருட்பெயர்களாக மாற்றம் பெறுகின்றன. இவை பகுத்தக்கனவாக இருப்பதால் பொருட்பெயர்ப் பகுபதங்களாகும்.


(2) 3.1.(2) இடப்பெயர்ப் பகுபதம்

இடத்தைப் பகுதியாகக் கொண்டவை இடப்பெயர்ப் பகுபதம் ஆகும்.

காட்டுகள் :

கருவூர்+ஆர் = கருவூரார்;

உறையூர்+ஆன் = உறையூரான்;

நாஞ்சில்+அன்= நாஞ்சிலன்;

பட்டினம்+ஆர் = பட்டினத்தார்;

உலகு+ஓர் = உலகோர்


(2) 3.1.(3) காலப்பெயர்ப் பகுபதம்

நாள், திங்கள், ஆண்டு ஆகிய காலப்பெயர்களோடு விகுதி இணைந்திருப்பின் அவை காலப்பெயர்ப் பகுபதங்கள் ஆகும். காலப்பெயர்ப் பதங்கள் அரிதாகவே வழக்கிலிருக்கின்றன.

காட்டுகள் :

கார்த்திகை+அன் = கார்த்திகையன் (கார்த்திகேயன்);

ஆதிரை+ஆள் = ஆதிரையாள் (திருவாதிரையில் பிறந்தவள்).


(2) 3.1.(4) சினைப்பெயர்ப் பகுபதம்

உறுப்புகளின் பெயரோடு வருபவை சினை(உறுப்பு)ப்பெயர்ப் பகுபதங்களாகும். இவையும் அரிதானவையே.

காட்டுகள் :

கண்+அன் = கண்ணன்;

குழல்+இ = குழலி (குழல் என்பது இங்குக் கூந்தலைக் குறிக்கும்).


(2) 3.1.(5) குணப்பெயர்ப் பகுபதம்

ஒரு பண்பைப் பகுதியாகக் கொண்டு, அத்துடன் விகுதி இணைந்து வருவது குண(பண்பு)ப்பெயர்ப் பகுபதம் எனப்படும்.

காட்டுகள் :

முருகு+அன் = முருகன் / அழகு+அன் = அழகன்;

கருப்பு+அன் = கருப்பன்;

வெள்ளை+அன் = வெள்ளையன்


(2) 3.1.(6) தொழிற்பெயர்ப் பகுபதம்

தொழிற்பெயரோடு விகுதி சேர்ந்து வருபவை தொழிற்பெயர்ப் பகுபதங்கள் எனப்படும்.

காட்டுகள் :

கொத்து+அன் = கொத்தன்;

தச்சு+அன் = தச்சன்;

உழவு+அன் = உழவன்.


சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

பழகு மொழி - 14

(2) 3.பகுபதங்கள்

பகுக்கப் படும் பதங்கள் (சொற்கள்) பகுபதங்கள் எனப்படும். ஒரு பகுபதம் என்பது குறைந்தது இரு உறுப்புகளைக் கொண்டிருக்கும். முதலாவது உறுப்பு, "பகுதி" என்றும் இரண்டாவது உறுப்பு, "விகுதி" என்றும் கூறப்படும். சிலர், பகுதியை "அடிச்சொல்" என்றும் அதில் வந்து ஒட்டும் விகுதியை "ஒட்டு" எனவும் கூறுவர். ஒரு பகுபதத்தில் ஆகக் கூடுதலாக இடம்பெறத் தக்க உறுப்புகளின் எண்ணிக்கை ஆறாகும்.

பகுதியான அடிச்சொல் சுருக்கமான பொருளை உடையதாக விளங்கும். பகுதியும் விகுதியும் இணைந்து, விரிந்த பொருள் தரும். ஆனால், தனித்த விகுதி பொருளற்றுக் கிடக்கும்.

காட்டாக,

ஆடு+கள் = ஆடுகள். இதில் "ஆடு" எனும் சொல்லானது பொருள் தரும் தனித்த அடிச்சொல்(பகுதி) ஆக அமைந்துள்ளது. "கள்" எனும் விகுதி, பன்மையைச் சுட்டுவதற்காக வந்து ஒட்டியுள்ளது. இங்கு விகுதியாக வந்து ஒட்டிய "கள்", தனித்துப் பொருள் தரக்கூடிய குடிக்கும் "கள்" அன்று. எனவே, விகுதியான "கள்" பொருள் தரத்தக்கச் சொல்லன்று.

சுக்கு, அச்சு, கட்டு, பத்து, காப்பு, மாற்று ஆகியவை வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களாகும். இவற்றைப் பழகுமொழி-05இன் பாடம் (1):2:2இல் படித்திருக்கிறோம். வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து வரும் சொல் (வருமொழி) க/ச/த/ப ஆகிய ஏதேனும் ஒரு வல்லின உயிர்மெய்யில் தொடங்கினால், நிலைமொழியான குற்றியலுகரச் சொல்லின் இறுதியில் க்/ச்/த்/ப் ஆகிய வல்லொற்று இணைந்து கொள்ளும் என்பது விதி. இவ்விதி, வருமொழியானது தனித்துப் பொருள் தரும் சொல்லாக இருந்தால் மட்டுமே பொருந்தும்.

காட்டுகள்:
சுக்கு+குழம்பு = சுக்குக்குழம்பு; மாற்று+சாலை = மாற்றுச்சாலை; கட்டு+திட்டம் = கட்டுத்திட்டம்; பத்து+பாட்டு = பத்துப்பாட்டு

அதனாற்றான், எழுத்து, கருத்து, வாழ்த்து, பாட்டு ஆகியன வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களாகவே இருந்தபோதும் அவற்றுடன் வந்து ஒட்டும் தனித்துப் பொருள் தராத "கள்" விகுதியில் வலிமிகலாகாது என்று தமிழறிஞர்கள் கூறுவர்.

காட்டுகள்:

எழுத்து+கள் = எழுத்துகள்; கருத்து+கள் = கருத்துகள்; வாழ்த்து+கள் = வாழ்த்துகள்; பாட்டு+கள் = பாட்டுகள்.

ஒரு சொல் பகுக்கத் தக்க இரு உறுப்புகளைக் கொண்டிப்பதுபோல் தோன்றினாலும் இரு உறுப்புகளும் பொருள் தருவனவாக அமைந்திருந்தால் அச்சொல்லைப் பகுதி+விகுதி எனப் பிரித்துக் கூறலாகாது.

காட்டுகள்:

ஆடு+குட்டி = ஆட்டுக்குட்டி; தாய்+மடி = தாய்மடி; யானை+தந்தம் = யானைத்தந்தம்

மேற்காண்பவற்றுள் குட்டி, மடி, தந்தம் ஆகியன தனித்துப் பொருள் தரும் சொற்கள். எனவே, ஆட்டுக்குட்டி, தாய்மடி, யானைத்தந்தம் ஆகிய சொற்களை, "கூட்டுப்பகுதி" எனக் கூறுவர். அஃதாவது விகுதி அல்லாத, பகுதிகளின் கூட்டு என்பது அதன் பொருள்.

கூட்டுப்பகுதியை, "தொகைச்சொல்" என்றும் கூறுவர். தொகை என்றால் தொக்கி (மறைந்து) நிற்பதாகும். மேற்காணும் மூன்று காட்டுகளிலும் "இன்" எனும் ஐந்தாம் வேற்றுமை தொக்கி (மறைந்து) உள்ளது.

விளக்கம்:

ஆடு+இன்+குட்டி = ஆட்டின் குட்டி / ஆட்டுக்குட்டி; தாய்+இன்+மடி = தாயின் மடி / தாய்மடி; யானை+இன்+தந்தம் = யானையின் தந்தம் / யானைத்தந்தம்.


(2) 3.1 பகுபத வகைகள்

பகுபதங்கள் அறுவகைப் பெயர்களையும் காலங் காட்டும் இருவகை வினைகளையும் உள்ளடக்கியவை என்று நன்னூல் கூறுகிறது:

பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலின்
வருபெயர் பொழுதுகொள் வினைபகு பதமே
- நன்னூல் 132.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.