திங்கள், 20 ஜூலை, 2009

பழகு மொழி - 03

(1):1:2 மெய்யெழுத்துகள்

'புள்ளி எழுத்து' என்று வழக்கிலும் 'ஒற்று' என்று இலக்கியத்திலும் குறிப்பிடப் படுபவை மெய்யெழுத்துகளாகும். மெய்யெழுத்தின் மாத்திரை அரையாகும். மெய்யெழுத்து இனங்கள் மூவகைப் படும்:


(1):1:2:1 வல்லினம்

க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய ஆறும் வன்மையுடன் ஒலிப்பதால் வல்லினம் என்றானது.

(1):1:2:2 மெல்லினம்

ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ஆகிய ஆறும் மென்மையாக ஒலிப்பதால் மெல்லினம் என்றானது.

(1):1:2:3 இடையினம்

ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆகிய ஆறும் வன்மைக்கும் மென்மைக்கும் இடைப்பட்டு ஒலிப்பதால் இடையினம் என்றானது.

குறிப்பு: ா என்று நாம் எழுதும் துணையெழுத்து/துணைக்கால், ஓர் ஒற்றை(புள்ளியை)த் தாங்காது. ர் என்று எழுதுவது பிழையாகும்; உயிர் மெய்யெழுத்துக்கு மட்டுமே ஒற்றை/புள்ளியைத் தாங்கும் வலுவுண்டு.

எனவே, 'ர'வுக்கு மேல் புள்ளியிட்டு,irஎன்று எழுத வேண்டும்.

தற்போது நம் பயன்பாட்டில் உள்ள யுனிகோடு எழுத்துருவில் இவ்வசதி இல்லையென்பதால் நாம் அதன் வழியிலே தொடர்ந்து செல்வோம். யுனிகோடில் திருத்தம் வரக்கூடும்.


வாசகர்களுக்காகக் கடந்த வாரம் வினவப் பட்ட வினா:

"மழை நீர் உயிர் நீர்; மழை நீரை சேமிப்போம்" என்ற விளம்பரத்தில் உள்ள பிழை என்ன? காரணத்துடன் விளக்குக!


கடந்த வார வினாவுக்கான விடை:

'நீரை' எனும் சொல், 'நீர்' எனும் சொல்லோடு 'ஐ' எனும் இரண்டாம் வேற்றுமை இணந்த சொல்லாகும் (நீர்+ஐ=நீரை).

இரண்டாம் வேற்றுமைச் சொல் இணைந்த (முன்மொழிச்) சொல்லை அடுத்து வரும் தமிழ்ச்சொல் (வருமொழி), (க்+உயிர், ச்+உயிர், த்+உயிர், ப்+உயிர் ஆகிய வல்லினத்தில் தொடங்கினால் முன்மொழியில், வருமொழியின் முதல் எழுத்தின் உயிர் மெய் (புள்ளி/ஒற்று) எழுத்து ஒன்று புதிதாக உருவாகி, முன்மொழியின் இறுதியில் இணைந்து கொள்ளும். இதை வலி மிகுதல் எனக் கூறுவர். பிற்பாடு வரவிருக்கின்ற வேற்றுமைப் பாடத்தில் அவற்றை விரிவாகப் பழகவிருக்கிறோம்.

எனவே, "நீரை சேமிப்போம்" என்று பிழையாக எழுதாமல் நீரைச் சேமிப்போம் என எழுதப் பழகுவோம்.

வாசகர்களுக்கான இவ்வாரக் கேள்வி:

சென்னை ப்ராட்வேயில் மாநகராட்சி நிர்வகிக்கும் ஒரு பூங்கா "ஸ்ரீராமுலு பூங்கா" ஆகும். அதில் ஓர் அறிவிப்பு:
"எதிரிலுள்ள ஹோட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யப் பட்டு இந்த பூங்காவில் பயன்படுத்தப் படுகிறது"

மேற்காணும் அறிவிப்பில் உள்ள பிழை யாது?

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

திங்கள், 13 ஜூலை, 2009

பழகு மொழி - 02

(1):1:1 உயிரெழுத்துகளும் அவற்றின் தனித் தன்மைகளும்

உயிரெழுத்துகளை நான்கு வகைப் படுத்துவர்:

  1. குற்றெழுத்து(குறில்),
  2. நெட்டெழுத்து(நெடில்),
  3. சுட்டெழுத்து,
  4. வினாவெழுத்து.

(1):1:1:1 குற்றெழுத்து அல்லது குறில். இதன் ஒலி, ஒரு மாத்திரை கால அளவு குறுகி ஒலிப்பதால் குறில் என்றானது:

,,,, = 5 எழுத்துகள்.

ஒரு மாத்திரை கால அளவு என்பது கண் சிமிட்டும் நேரம் அல்லது கைவிரல் சொடுக்கும் நேரம் என்பர். ஒரு மாத்திரைக்கும் குறைவான கால அளவில் கண்களை மூடித் திறந்து விடலாம். அதற்காகவே, "இயல்பெழு மாந்தர் இமை நொடி மாத்திரை" என்றது நன்னூல். அஃதாவது மனிதன் இயல்பாகக் கண்களை மூடித் திறக்கும் நேரம் ஒரு மாத்திரையாம். அதுபோல், "உன்னல் காலே; ஊன்றல் அரையே; முறுக்கல் முக்கால்; விடுத்தல் ஒன்றே" எனும் சூத்திரப்படி, கட்டை விரலையும் நடுவிரலையும் சேர்க்க நினைப்பது (உன்னல்) கால் மாத்திரையாம். அவ்விரு விரல்களையும் இணைப்பது (ஊன்றுதல்) அரை மாத்திரையாம். சொடுக்குவதற்காக முறுக்குவது முக்கால் மாத்திரையாம். முறுக்கியதை விடுவது ஒரு மாத்திரையாம்.

(1):1:1:2()நெட்டெழுத்து அல்லது நெடில். இதன் ஒலி இரு மாத்திரை அளவு முழுமையாக நீண்டு ஒலிப்பதால் நெடில் என்றானது:

,,,, = 5 எழுத்துகள்.

குறிப்பு: ,ஓ ஆகிய இரண்டு எழுத்துகளும் ஒரு சொல்லின் இறுதியில் அமைந்து வினாவெழுத்தாக மாறும். "ஆ" என்பது ஓரெழுத்து ஒரு மொழி/சொல் ஆகும். "ஆ" என்றால் பசு (ஆவின் பால்).

(1):1:1:2()குறுக்கம். இதன் ஒலி ஒன்றரை மாத்திரை அளவே ஒலிப்பதால் இது குறுக்கமென்றாலும் தொல்காப்பியத்தில் நெடிலுடன் சேர்த்தே கணக்கிடப் படுகிறது: ", , , , , , ஔ என்னும் அப்பால் ஏழும் ஈரளபிசைக்கும் நெட்டெழுத்தென்ப". ஆனால், உண்மையில் ஐ,ஔ ஆகிய இரண்டும் குறுக்கமே. "மூன்று உயிர்அளபு, இரண்டா நெடில், ஒன்றே குறிலோடு '' ''க் குறுக்கம் ஒற்றளபு....." -நன்னூல். நமது பாடங்களில் இவ்விரண்டையும் குறுநெடில்/குறுக்கம் என்றே குறிப்போம்.

, = 2 எழுத்துகள்.

குறிப்பு: ஐ என்பது இரண்டாம் வேற்றுமைக்குரிய எழுத்தாகும். (அவன்+ = அவனை). ஐ எனும் எழுத்து, தனித்து ஒலிக்கும்போது இரண்டு மாத்திரை; ஒரு சொல்லின் தொடக்கத்தில் ஒன்றரை மாத்திரை; நடுவில்/இறுதியில் ஒரு மாத்திரை அளவுகளாக மூன்று வகைகளில் மாறி ஒலிக்கும். "தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம் நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்" -நன்னூல்.

காட்டுகள்: தனித்த = இரண்டு மாத்திரை

சொல்லின் முதலில்: யம் = ஒன்றரை மாத்திரை

சொல்லின் நடுவில்: அலையோசை = ஒரு மாத்திரை

சொல்லின் இறுதியில்: மலை = ஒரு மாத்திரை

(1):1:1:3 சுட்டெழுத்து. சொல்லின் முதலெழுத்தாக அமைந்து, ஒன்றைச் சுட்டிக் காட்டும் ஓரெழுத்து, சுட்டெழுத்தாகும்.

,, = 3 எழுத்துகள்

காட்டுகள்: +சொல்=அச்சொல்; +பாடம்=இப்பாடம்; +பக்கம்=உப்பக்கம்.

'உப்பக்கம்' என்பது இப்போது வழக்கில் இல்லாத சொல்லாகும். 'பின்பக்கம்' என்பது அதன் பொருளாகும்.

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்" என்று குறள் (620) கூறுகிறது. அதன் பொருள், தளராத முயற்சியை உடையோர் விதியையும் (உப்பக்கம்=)புறமுதுகிடச் செய்வர்" என்பதாகும்.

(1):1:1:4 வினாவெழுத்து. ஒரு சொல்லின் இறுதி எழுத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு வினாவை எழுப்புவது வினாவெழுத்தாகும்.

, = 2 எழுத்துகள்

காட்டுகள்: வருவான்+ = வருவானா?

வருகின்றான்+ = வருகின்றானா?

வந்தான்+ = வந்தானா?

தருவான்+ = தருவானோ?

மாட்டான்+ = மாட்டானோ?

*********************************

கடந்த வாரச் சொற்றொடர் பற்றிய விளக்கம்:

'என்ற', 'எனும்' ஆகிய சொற்களை முறையே இறந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் பயன் படுத்த வேண்டும்.

பிழையான சொற்றொடர்: "தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்".

"தஞ்சாவூர் என்ற ஊர்" என்று எழுதினால் அவ்வூர் இப்போது இல்லை என்றாகும். அதுபோலவே, "அருண்மொழி எனும்" என்று எழுதினால் அவன் இப்போது உயிருடன் இருக்கிறான் என்றாகும்.

சரியான சொற்றொடர்: "தஞ்சாவூர் எனும் ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி என்ற இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்".

இக்கட்டுரையைத் தொடர்ந்து கருத்தூன்றிப் படித்து வந்தால் சரியான, சிறந்த சொற்றொடர்களை எழுத முடியும்.

வாசகர்களுக்கான இவ்வாரக் கேள்வி:

"மழை நீர் உயிர் நீர்; மழை நீரை சேமிப்போம்"என்ற விளம்பரத்தில் உள்ள பிழை என்ன? காரணத்துடன் விளக்குக!

உதவி : சரியான விடை தருவதற்கு இப்பாடத்தில் உதவி ஒளிந்திருக்கிறது.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

செவ்வாய், 7 ஜூலை, 2009

பழகு மொழி - 01

(1) எழுத்தியல்

நம் தாய்மொழியாம் தமிழின் பெருமைகள் குறித்து எழுதப் புகுந்தால் ஏராளம் எழுதலாம். அவற்றுள் தாய்த்தமிழைப் புகழ்ந்தேற்றி நம்மவர்கள் பாடிவைத்தவை மட்டுமின்றி, தமிழைக் காதலித்து வாழ்ந்து மறைந்த வெளிநாட்டுக் காரர்களும் அடங்குவர்.

தமிழில் தேம்பாவணி எனும் பெருங்காப்பியம் பாடிய வீரமாமுனிவர் இத்தாலியில் பிறந்தவர். தமிழில் பல நூல்களையும் இலக்கண விளக்கங்களையும் வழங்கியவர். இப்போது நாம் பயன் படுத்தும் ஏ,ஓ ஆகிய இரு தமிழ் எழுத்துகளும் கி.பி. 1720வரை எ,ஒ ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு அமைக்கப் பட்டிருந்தன. அவற்றை ஏ,ஓ என்று மாற்றியமைத்தப் பெருமை வீரமாமுனிவருக்குண்டு. தமிழ்மொழி வேற்றுநாட்டவரையும் எவ்வாறு ஈர்த்தது என்பதற்கு, "இங்குத் தமிழ் மாணவன் ஒருவன் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறான்" என்று தன் கல்லறையில் குறிக்குமாறு கேட்டுக் கொண்டு உயிர் விட்ட டாக்டர் ஜி.யூ.போப் பாதிரியாரின் முறிச் சான்று ஒன்றே போதும்.

உலகின் வாழும் செம்மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழியின் பேச்சுத் தொடக்கம் ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் அது வரிவடிவம் பெற்றது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் கூறுவர்.

சிறந்த ஒரு மொழியின் அடிப்படை அதன் சொல்வளமாகும். சொல்லுக்கு அடிப்படை எழுத்துகளும் எழுத்துக்கு அடிப்படை ஒலியுமாகும். எழுத்துகளை அவற்றின் ஒலிகளுக்கேற்ப மூன்று இனங்களாகப் பிரித்துத் தன்னகத்தே கொண்டிலங்குவதை ஆராய்ந்து பார்த்தால் தமிழ்மொழியின் அறிவியல் புரியும்.

(1):1 எழுத்து வகைகள்

தமிழெழுத்து நான்கு வகைப்படும்:

(1):1:1 உயிரெழுத்து (அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ) = 12

(1):1:2 மெய்யெழுத்து (க்,ச்,ட்,த்,ப்,ற்,ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) = 18

(1):1:3 உயிர் மெய்யெழுத்து (க்+அ=க, தொடங்கி ள்+ஔ=ளௌ வரை 12x18) = 216

(1):1:4 ஆய்த எழுத்து (ஃ) = 1


மொத்தம் 247 எழுத்துகள்.

"அட..... ஆனா ஆவன்னாக்குத்தான் இம்பூட்டு அலப்பறயா.....?" என்று தயை கூர்ந்து யாரும் கேட்டு விடாதீர்கள்.

தமிழ் வட்டெழுத்துகள் (வரிவடிவங்கள்) பற்றி நிறைய வேறுபட்ட கருத்துகள் உள்ளன. தமிழில் மொத்த உயிரெழுத்தே (அ,இ,உ,எ,ஒ) ஐந்துதான் எனும் வெடிக்கருத்தும் அதிலொன்று. எப்படி எனில், அ+அ=ஆ, இ+இ=ஈ, உ+உ=ஊ, எ+எ=ஏ, ஒ+ஒ=ஓ ஆக ஓரேயெழுத்து இரண்டு தடவை வந்தால் நெடிலாகி விடும் எனும் யுனிகோடு கணக்கோடு, அ+ய்=ஐ, அ+வ்=ஔ என்று வளைத்துக் கொண்டு வருவோரும் உண்டு. ஐ,ஔ ஆகிய இரண்டு எழுத்துகள் பண்டைய தமிழில் இல்லாமலிருந்து பின்னர் வந்து இணைந்தவை எனும் கருத்தும் உண்டு. ஏனெனில், கி.பி 3-6 நூற்றாண்டுகளைச் சேர்ந்த எந்தக் கல்வெட்டிலும் நடுகல்லிலும் ஐ,ஔ ஆகிய இரண்டு எழுத்துகளும் காணப் படவில்லை. மீக்கூறியவாறு ஏ,ஓ ஆகிய இரு எழுத்துகளும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டவை. அதுமட்டுமின்றி 'ஈ' என்பது எழுத்தன்று; அஃது ஓர் ஓவியம் எனும் கருத்தும் உண்டு. காரணம், ஒரு நெடிலின் வரிவடிவம் அதன் குறிலை ஒத்திருக்க வேண்டும். காட்டாக, 'ஆ' எனும் நெடிலின் வரிவடிவம் 'அ' எனும் குறிலை ஒத்திருக்கிறது. 'ஈ' எனும் நெடிலில் 'இ' எனும் குறிலை ஒத்த வடிவமே இல்லாமல் முற்றிலும் வேறாக உள்ளது.

இருப்பினும் தொல்காப்பியரின் கூற்றுப்படி,

அ இ உ
எ ஒ என்னும் அப் பால் ஐந்தும் ...
...
ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஔ என்னும் அப் பால் ஏழும் ...

சேர்த்து 12உம் உயிரெழுத்துகள் என்றே நாம் கொள்வோம்.

எழுத்துகளோடு அவ்வப்போது கொஞ்சம் இலக்கணமும் பார்த்துக் கொள்ளலாம்:

"தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்" எனும் சொற்றொடரில் உள்ள பிழைகளை, தெரிந்தவர்கள் இங்குச் சுட்டிக் காட்டுங்கள்.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, 5 ஜூலை, 2009

பழகு மொழி - முன்னுரை

"ல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே - வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி எனத் தமிழ்க்குடியாகத் திகழ்வதற்குப் பெருமை கொண்டோம். ஆனால், கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்னர் மனிதன் தோன்றியிருப்பானா என்பதைச் சிந்திக்க மறந்தோம். ஏனெனில் தாய்மொழிப் பாசம் நமது அவ்வாறான சிந்தனையைத் தடுத்து விட்டது"


மேற்காண்பது, ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் "கல்வெட்டு முதல் கம்ப்யூட்டர்வரை - தமிழ் எழுத்துகளின் வரிவடிவ வளர்ச்சி" என்ற தலைப்பில் 'தமிழ் கம்ப்யூட்டர்' இதழுக்கு அடியேன் எழுதிய கட்டுரையின் தொடக்கம்.

மனிதனின் முதல் ஆயுதமான கல் தோன்றுவதற்கு முன்னரே வாள் தாங்கிய தமிழனைக் கற்பனை செய்து பார்ப்பதை மறந்து, கம்ப்யூட்டரில் - இணையத்தில் தமிழ் மொழியின் பரவலைப் பார்க்கும்போது பூரித்துப் போகிறோம்!

யுனிகோடு எனும் ஒருங்குறி அற்புதம் இணையத்தில் புரட்சியாகப் புகுந்தபின் தமிழும் கணினி அறிவும் தெரிந்த பலரும் எழுத வந்தனர் - இரண்டுமே கொஞ்சம் தெரிந்திருந்தால் போதும் என்ற துணிச்சலோடு.

ப்ளாகர் எனும் இலவச வலைப்பூ இணையத்தில் அறிமுகமான பின்னர் அறிவியல், ஆன்மீகம், அரசியல், விளையாட்டு, உலக நடப்புகள், போன்ற எல்லாத் துறைகளிலும் தத்தமக்கு உள்ள சொந்தக் கருத்துகளை, புலமையை இணையத்தில் வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் பகிர்ந்து ஓரளவு பலனடைந்து வருகிறோம்.

ஆனால், நாம் எழுதும் தமிழ் தரமானதா என்பதைக் குறித்துப் பெரும்பாலோர் கவலை கொள்வதே இல்லை. இணையத்தில் எழுதுபவர்களை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. ஏனெனில் பெரும்பாலான தமிழ் அச்சு ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் தம் மொழித் திறன் குறித்துக் கிஞ்சிற்றும் கவலை கொள்வதில்லை.

"இரண்டு வாகனம் நேருக்கு நேர் மோதல்" என்று நாளிதழ்களில் படிக்கும்போதும் "இத்துடன் செய்திகள் முடிவடைந்தது" என்று தொலைக்காட்சியில் கேட்கும்போதும் பலவேளை மனத்துக்குள் வருத்தமும் சிலவேளை முள் குத்தும் வலியும் தோன்றுகிறது!

அவற்றைத் திருத்தி முடிப்பது நம்மால் ஆகாது என்றாலும் இணையத்தில் எழுதுபவர்கள் பிழையின்றித் தமிழ் எழுத நாம் உதவலாம் என்ற எண்ணம் நீண்ட காலமாக எனக்கு இருந்து வந்தது. இங்கு எழுதத் தொடங்கியதற்கு அதுவே தலையாய காரணமன்று.

"அன்புள்ள ஆசிரியருக்கு," எழுதி அலுத்துப்போய் நீண்ட காலம் எழுத்தில் தொடர்பு இல்லாமல், இப்போது எழுதத் தொடங்கியதில் இலக்கண/எழுத்துப் பிழைகள் எனக்குக் கூடுதலாக வருகின்றன. தீட்டப் படாமல் உறையினுள் உறங்கும் வாள், கூர் மழுங்கிப் போய்விடுவது இயல்பன்றோ? அதுவும் ஒரு தமிழ்க்குடியின் வாள் ...!

இந்தத் தொடரின் உண்மையான நோக்கம் புரிந்திருக்குமே! ஆம்; தூர் வாரப்படாமல் கிடக்கும் எனது 'கிணற்றை'த் தூர்வாரும் முயற்சியில் ஒரு தொடர். அதற்குத் துணைபுரிந்து இடமளிக்கும் சத்தியமார்க்கம்.காம் தளத்தினருக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும். 'பழகு மொழி' எனும் தலைப்பில் தமிழைப் பிழையறக் கற்று எழுதுவதற்கான இக்கட்டுரையை, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் தொடர்ந்து வெளியிட அத்தளத்தினர் அன்புடன் இசைந்துள்ளனர்.

கற்றுக் கொடுப்பதற்காகவே கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள. சுருங்கக் கூறின், 'தொட்டனைத்தூறும் மணற்கேணி ...' முயற்சியே இத்தொடர்.

அந்தக் குறளின் முழுமையையும் ஓர் அன்பர், "தொட்டனைத்தூறும் ம‌ண‌ற் கேணீ மாந்த‌ற்க்கு க‌ற்ற‌னைத் தூறும் அறிவு" என்று இணையத்தில் எழுதி வைத்திருக்கிறார். படிக்கும் நமக்கே வலிக்கிறது! எழுதியவன் படித்தால் என்னாகும்?

"யோவ்! எழுதுறப் படிச்சிட்டுப் போவியா, அத விட்டுட்டு எலக்கணம் எழுத்துப்பிழை எல்லாம் பார்க்கணுமாக்கும்?" என்று எரிச்சல் படும் தமிழ்க்குடி, ஆங்கிலத்தில் எவராவது பேசும்போதோ எழுதும்போதோ சிறுபிழை செய்தாலும் அறச்சீற்றம் கொண்டு விடுவார்; குறைந்தது எள்ளி நகையாடத் தவற மாட்டார்.

ஆங்கில எழுத்துகள் மொத்தம் எத்தனை? என்று கேட்டால் அடுத்த நொடியில் விடை சொல்லிவிடக் கூடிய நம்மில் எத்தனை பேர், "தமிழ் மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?" என்ற கேள்விக்குச் சட்டென விடை சொல்வோம்?

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.